அண்டவெளியில் நமது பூமி இருக்கும் கேலக்ஸிக்கு “மில்கி வே கேலக்ஸி என்கிற பெயரைச் சூட்டியிருக்கிறோம் என்கிறபோதே இன்னும் பிற கேலக்ஸிகளும் இந்தப் பேரண்டத்தில் இருக்கின்றன எனும் பொருள் புரிந்துவிடுகிறது. அதேபோலவே நமது அண்டையில் இருக்கும் கேலக்ஸியான ஆன்ட்ரோமெடா கேலக்ஸி மிக வேகமாக நகர்ந்துவருகிறது என்பதையும் அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு மில்கி வே கேலக்ஸியும் ஆன்ட்ரோமெடா கேலக்ஸியும் ஒன்றோடொன்று மோதி ஒரு பெருவெடிப்பு நிகழ வாய்ப்பிருக்கிறது. அதில் பூமி பாதிப்படையாமலும் இருக்கலாம் அல்லது சிதைந்துபோவதும் நடக்கலாம் என்பதெல்லாம் அறிவியலாளர்களின் யூகமாக இருக்கிறது. இன்னும் பல புதிய கேலக்ஸிகளை வானியலாளர்கள் கண்டடைந்து அதன் இயல்புகளை ஆய்ந்து, குறிப்பிட்ட பெயரைச் சூட்டுவதற்கு முன்பு எண்களால் தற்போதைக்கு குறித்துவைக்கிறார்கள். இப்புவியில் வட அமெரிக்கக் கண்டத்தின் கரியமலையில் உருவான கொலராடோ ஆறு ஏற்படுத்திய மிகப்பெரிய பள்ளத்தாக்குகள் அடங்கிய பகுதிக்கு கிராண்ட் கேன்யான் என்னும் பெயர் எப்படி வந்திருக்குமென்று சிந்தித்தால் அப்படியான இன்னும் பல கேன்யான்கள் உருவாகியிருக்க வேண்டுமென்று யூகிக்க முடிந்தது.
நீரால் அரிக்கப்பட்ட நிலத்தின் ஆழமான பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு கேன்யான் என்றும் பெயராகிறது. இயற்கையின் ஏழு அதிசயங்களில் ஒன்றான மிகப்பிரம்மாண்டமான கிராண்ட் கேன்யான் தவிர ஆன்டிலோப் கேன்யான், பிளாக் கேன்யான், வால்நட் கேன்யான், பிரைஸ் கேன்யான், கிங்ஸ் கேன்யான், ஓக் கிரீக் கேன்யான், ரெட் ராக் கேன்யான், ஹெல்ஸ் கேன்யான், சியோன் கேன்யான், கிளென் கேன்யான், அஸ்டோரியா கேன்யான், பிக் காட்டன் வுட் கேன்யான் என இன்னும் பல கேன்யான்கள் வட அமெரிக்காவில் இருக்கின்றன.
ஃபிளாக் ஸ்டாஃபில் கிராண்ட் கேன்யானுக்கு அருகிலிருந்த கிளென் கேன்யானை மறுநாள் காலையில் காண்பதற்காக இரவே சென்று அவ்விடத்தின் அருகில் முன்பதிவு செய்திருந்த அறையில் தங்குவதாகத் திட்டமிட்டிருந்தோம். அதற்காக கிராண்ட் கேன்யானிலிருந்து புறப்பட்ட நாங்கள் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிராண்ட் கேன்யானை நோக்கிப் பயணித்த வழியில், சாலையின் இருபுறமும் ஆங்காங்கே இருந்த பனிக்குவியலை அவ்வப்போது நின்று ரசித்துக்கொண்டோம். பைன் மரங்களின் இலைகளிலிருந்து வழிந்த உருகிய பனிநீர் எங்கள்மீதும் தெறித்து குளிர்வித்தது.
கீழே உதிர்கின்ற இலைகளும் மரக்குச்சிகளும் மண்ணுக்கு இரையாகும்படி அவற்றை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டிருந்தார்கள். சாலையில் பயணிக்க விதித்திருந்த விதிகளை எச்சரிக்கை அறிவிப்பாக எடுத்துக்கொண்டு அவற்றைக் கடைப்பிடித்தபடி எளிதாகப் பயணித்தோம். வேகக்கட்டுப்பாடு குறிப்பிட்டிக்கும் பகுதியில் அதனை மீறாமலும் பனிப்படலம் படிந்திருக்கும் சாலையின் பகுதிகளை கவனித்தும் அதற்கேற்றபடி பயணிக்கவேண்டியிருந்தது.
சூரியன் அஸ்தமிக்கின்ற நேரத்தில் அறை எண் 413 அருகில் வந்துசேர்ந்தோம். அமெரிக்க மாகாணங்களில் வீடு வாங்கி குடியிருக்கும் பிரஜைகள் வேறொரு மாகாணத்திற்கு இடம்பெயரும்பொழுது அவர்களது பழைய வீடுகளை விற்பனை செய்து விடுவதுவோ அல்லது சுற்றுலாப் பயணிகளுக்கு ஓரிரு நாட்கள் தங்குவதற்கு இடமாக வாடகைக்கு விடவோ செய்துவிடுகிறார்கள். அப்படியாக பயன்படுத்தும்பொழுது பயணிகளுக்கு வசதியாக இருக்கும்படி வீட்டிலுள்ள அடிப்படை உபகரணங்கள் அனைத்தும் இருக்கும் படியாக ஏற்பாடுகளைச் செய்துவைத்திருக் கிறார்கள். சமையலறையுடன் கூடிய இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடாக நாங்கள் தங்கியிருந்த வீடு இருந்தது.
இருபுறமும் பிரம்மாண்டமான மலைகளுக்கு நடுவே பயணித்து வெகு அருகிலிருந்த பவல் ஏரிக்கு வந்துசேர்ந்தோம். அங்கு குறுக்கே கட்டப் பட்டிருந்த கிளென் கேன்யான் அணைக்கு அருகே வந்து அதன் அழகை ரசித்தோம். 1.25 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள க்ளென் கேன்யான் தேசிய பொழுதுபோக்குப் பகுதி, நீர் சார்ந்த பொழுதுபோக்குகளுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. இப்பகுதி அரிசோனாவிலுள்ள லீஸ் ஃபெர்ரி முதல் தெற்கு யூட்டாவின் ஆரஞ்சு கிளிஃப்ஸ் வரை நூற்றுக்கணக்கான மைல்கள் வரை நீண்டுள்ளது. இது மிகுந்த அழகிய காட்சிகளைக் கொண்டு இப்பகுதிக்கேயுரிய புவியின் அதிசயங்களாக மிகப் பரவலான பார்வையைக் கொடுக்கும்படி விரிந்து பரந்து அமைந்திருக்கிறது.
நீரிலிருந்து மின்சாரம் எடுக்கும் பிரம்மாண்டமான கட்டமைப்புகளையும் காணநேர்ந்தது. இங்கிருந்து எடுக்கப்படுகின்ற மின்சாரமானது இப்பகுதியைச் சுற்றியுள்ள மற்ற மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மக்களுக்கு மின்சாரத்தைக் கடத்துகிறது.
அங்குள்ள மக்கள் பயன்படுத்துகின்ற கணினிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப்பெட்டிகள், மின்விளக்குகளென யாவற்றிற்கும் கொலராடோ ஆற்றின் நீரே உதவுகிறது என்பதையும் அங்கு நினைவுபடுத்தி எழுதி வைத்திருந்தார்கள்.
எனவே அந்த நதிக்கும் தனக்கும் எந்தவித உறவுமில்லையென்று எவரும் நினைக்க இயலாது. உண்ணுகின்ற காய்கறிகளையும் நினைவுபடுத்தும்படி மக்களிடம் கேள்விகளையெழுப்பி தகவல் பலகையில் குறிப்பிட்டிருந்தார்கள். இயற்கையின்மீது மக்கள் அக்கறை கொள்ள வேண்டுமென்பது அரசின் நோக்கமாக இருக்கிறது. ஒன்றுமே இல்லாத பாலைவனமென்று நாம் எண்ணிவிடாதபடி, இந்நிலத்தில் ஒவ்வொன்றையும் பொக்கிஷமாக எண்ணிப் பாதுகாக்கும் உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி அதனை அவர்கள் சாத்தியப்படுத்தியும் இருக்கிறார்கள்.
கொலராடோவிலிருந்து வரும் தண்ணீரின் பெரும்பகுதி விவசாய நோக்கங்களுக்காக பயன் படுத்தப்படுகிறது. கலிஃபோர்னியாவில் உள்ள விளைநிலங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நீர்ப்பாசன வசதி அங்கு விளைவிக்கப்படுகின்ற பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் மூன்றில் ஒரு பங்கு நீரை ஆண்டு முழுவதும் இந்த ஆறு வழங்குகிறது. ஆனால் 1960-களில் கிளென் கேன்யான் அணை கட்டப்பட்ட பிறகு தற்பொழுது கலிஃபோர்னியாவிற்கு வந்துசேர்கின்ற கொலராடோ ஆற்று நீரின் அளவு குறைந்திருக்கிறது. ஒரு ஆறு உற்பத்தியாகும் இடத்தைவிட அது முடிவடையும் இடத்தில் வாழும் உயிர்களுக்கே அது அதிக உரிமை கொண்டது என்கிற புத்தனின் வாக்கு இங்கும் செல்லுபடியாக வில்லை.
பிறகு அங்கிருந்து நகர்ந்து அருகிலிருந்த புகழ்பெற்ற ஹார்ஸ் ஷூ பெண்ட் என்று அழைக்கப்படுகின்ற பள்ளத்தாக்குப் பகுதிக்கு வந்தடைந்தோம். புகைப்படத்தில் அவ்விடத்தை ஏற்கனவே கண்டிருந்தாலும் நேரில் பார்த்தபோது கற்பனைக்கு எட்டாத அளவில் மிகப் பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொண்டிருந்தது. கேமராவின் கண்கள் பதியவைத்தது எவ்வளவு சொற்பமாக இருக்கிறதென, நேரில் கண்டபோது அடைந்த வியப்பு எண்ண வைத்தது. கண்களுக்கு கண் வேறுபடுகின்ற எத்தனை பொய்த் தோற்றங்கள் ஒரு இடத்திற்கு இருக்கிறதென்று எண்ணி வியந்துகொண்டோம். பாதுகாப்பு வேலிக்கு அருகேயிருந்த உயரமான பாறையின்மீது நின்றுகொண்டு, ஆழத்தில் கொலராடோ ஆற்றின் நீரானது குதிரையின் கால் குழம்பு போன்ற வடிவத்திலான பள்ளத்தில் சூழ்ந்திருக்க, மத்தியில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்த கல் தூண் தெரியும்படி பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/08/travel1-2025-11-08-15-39-06.jpg)
இன்னும் அருகே நெருங்கி புகைப்படம் எடுத்தவர்களை அக்குழி கவர்ந்து காவு வாங்கிக்கொண்டது என்பதையும் அன்றைய செய்தித்தாளில் அறிந்து எச்சரிக்கையாக இருந்தோம். பிறகு அங்கிருந்து நகர்ந்து அருகே மேடைபோன்றிருந்த உயரமான கல்லின் மீது ஏறி நின்று அங்கிருந்து கண்ட காட்சிகளையும் ரசித்தோம். காலைச் சூரியன் உதிக்கும்பொழுது விரிக்கும் கதிர்கள் பட்டுத்தெறித்து மஞ்சளும் ஆரஞ்சு வண்ணமும் எதிரொளித்து அங்கிருந்த சிவந்த பாறைகளை மேலும் அழகாக்கியது.
உயரத்திலிருந்து கீழே இறங்கி தரைப்பகுதியில் நடந்தபோது மீன்களின் உடலில் அடுக்கிய செதில் களைப்போல, பிரம்மாண்டமான அளவிலான பாறைகளின் செதில்கள், விரிந்த பரப்பளவில் நெருக்கமாக அடுக்கி வைத்ததைப் போல தரையில் பரவியிருந்தன. அப்போது கருப்பு நிற கார் ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து ஐந்து பேர் இறங்கினார்கள். அதில் ஒரு பெண் திருமணக் கோலத்தில் தரைமுழுவதும் விரவியிருந்த பாறைச் செதில்களின் மீது அவளது வெள்ளை நிறத்திலான ஆடை தவழும்படி தழையத் தழைய நடந்துசென்றாள். உடன் கருப்பு நிற மேலங்கி அணிந்திருந்த மணமகனும் கையில் பைபிளுடன் மற்றொருவரும் டி-ஷர்ட் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த ஒரு பெண் கேமராவுடனும் கூடுதலாக இன்னொரு ஆணும் உடன் சென்றார்கள்.
ஒரு சில சுற்றுலாப் பயணிகளே இருந்த அவ்விடத்தில் இவர்கள் புகைப் படம் எடுப்பதற்காக செல்கிறார்கள் என்கிற எங்களது எண்ணத்திற்கு மாறாக திருமண நிகழ்வே அப்பொழுதுதான் ஆரம்பித்தது. பைபிளை ஒருவர் வாசிக்க மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டதைக் காணநேர்ந்தது. இருவரது பெற்றோர்கள்கூட அங்கில்லை. அவரவர் விருப்பத்திற்கேற்ப இறையின் மீது நம்பிக்கை கொண்டு, இயற்கையான சூழலில் நடந்த திருமணத்தை இங்கு காண நேர்ந்தது. நெடிய பயணத்தில் இணைந்து செல்ல அக்கணம் எங்களது மனதால் வாழ்த்திக்கொண்டோம்.
இவ்விடம் பாலைவனப் பகுதி என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதற்கேற்றபடியான பாதுகாப்பு ஆடைகளும் நிறைய தண்ணீரும் எடுத்துக்கொள்ள வேண்டும். பகல் நேரத்தில் நிலவிய மயான அமைதியில் ஒருசில பறவைகளைத் தவிர சிறு உயிரிகளைக்கூட அங்கு காணநேரவில்லை. காக்கை போன்ற உருவம் கொண்ட சற்றே அளவில் பெருத்த ரேயன் எனும் ஒரு சில பறவைகளை மட்டும் அங்கிருந்த குடியிருப்புப் பகுதிகளில் செல்லும் வழியில் கண்டோம். இப்படியாக வறண்டிருக்கும் இவ்விடத்தில் நவாஜோ பழங்குடிகளுக்குச் சொந்தமான நிலம் இருப்பதாக அறிந்தோம். நவாஜோ நேஷன் (சஹஸ்ஹத்ர் சஹற்ண்ர்ய்) மற்றும் லேக் பவல் நவாஜோ பழங்குடிப் பூங்கா (கஹந்ங் டர்ஜ்ங்ப்ப் சஹஸ்ஹத்ர் பழ்ண்க்ஷஹப் டஹழ்ந்) இருந்த பகுதியை நோக்கிப் பயணமானோம். தங்களுக்குச் சொந்தமானதாக நிலத்தை எண்ணாமல் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து, தங்களை அந்த நிலத்திற்குச் சொந்தமானவர்களாக எண்ணி வாழ்பவர்கள் இவர்கள். இயற்கையை அழிக்காமல் வாழ்ந்த பழங்குடியின மக்கள், அழிவைச் சந்தித்து துரத்தப்பட்ட வரலாறுகளையும் இந்த வட அமெரிக்கக் கண்டம் உள்ளடக்கி வைத்திருக்கிறது. அதனை இப்பகுதியின் செந்நிறப் பாறைகளும் அவர்கள் சிந்திய குருதியின் அடையாளமாக தனது நிறத்தை உமிழ்ந்தவாறு பறைசாற்றிக் கொண்டிருந்தன.
தொடரும்....
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/08/travel-2025-11-08-15-38-54.jpg)